திருவண்ணாமலையைக் கிரிவலம் வரும் முறையில் இலட்சத்து எட்டு வகைகள் உண்டு என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு கிரிவல முறைக்கும் ஒவ்வொரு விதமான தெய்வீகப் பலன்கள் உண்டு. கிரிவலம் செய்கின்ற நாள், நட்சத்திரம் ஆகியவற்றைப் பொறுத்து பலன்கள் மாறுபாடடையும்.
இப்படிப் பல்வேறு கிரிவல முறைகள் இருந்தாலும் சித்தர்கள் சிறப்பாக வலியுறுத்துவது அமாவாசை மற்றும் பௌர்ணமி கிரிவலங்களை மட்டுமே. அப்படி என்ன இருக்கிறது இந்த அமாவாசை மற்றும் பௌர்ணமி கிரிவலங்களில். அதைப் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
அமாவாசை கிரிவலம்
அமாவாசை என்பது பூமியில் நிலவு தென்படாத நாளென்ராலும் அதனுடைய ஆகர்ஷண சக்தியால் அதிகபப்டியான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற நாளாகையால் இந்த அமாவாசை கிரிவலம் சிறப்பானதாகக் கூறப்படுகிறது.
ஜீவ சமாதி அடைந்த சித்தர்களின் ஆசீர்வாதமும், குருவின் திருவருளும், இறைவனின் திருவருளும் ஒரே சமயத்தில் ஒருசேரக் கிடைக்கும் நாள் இந்த அமாவாசை தினமாகும்.
அமுதம் பெறும் பொருட்டு தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைய அதனில் எழுந்த ஆலகால விஷத்தை உட்கொண்டு இறைவனாகிய சிவபெருமான் அரை மயக்கத்தில் இருந்த போது உலகத்து ஞானிகளும், சித்தர்களும், அமரலோகத்து தேவர்களும் இறைவனைக் காண்பதற்காக கயிலாயத்தில் ஒன்றாகக் கூடிய அபூர்வமான நாள் இந்த அமாவாசை தினம்.
இந்த அமாவாசை தினத்தில் தான் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒரு சில நிமிடங்கள் இணைந்து பிரியுமாம். அந்த சில நிமிடங்கள் புனித நிமிடங்களாக கருதப்படுகிறது.
இப்படிப்பட்ட அற்புதமான அமாவாசை தினத்தற்னு கிரிவலம் வரும்போது தேவர்கள், சித்தர்கள், ஞானியர்கள் என்று அனைத்து தரப்பினரின் ஆசிகளும் நமக்கு மானசீகமாக கிடைப்பதால் அமாவாசை கிரிவலம் மிகச்சிறப்பானது என்று கூறப்படுகிறது.
எந்தெந்த மலைகளிலெல்லாம் சிவலிங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் அமாவாசை தினத்தன்று சிறப்பு பூசை செய்தால் ஆயுள் விருத்தியும், ஐஸ்வரிய விருத்தியும் ஏற்படும்.
பௌர்ணமி கிரிவலம்
பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் வருபவர்களுக்கு நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இறைவன் அன்றைய தினம் சந்திரக் கதிர்கள் வாயிலாக உலகத்து உயிர்களுக்கெல்லாம் தமதருளை வழங்கிக் கொண்டிருப்பதால் அன்றைய கிரிவலம் சிறப்பு மிக்கது என்று கூறப்படுகிறது. சந்திரனின் பதினாறு பூரண கலைகளும் திருஅண்ணாமலைத் திருமேனியில் பட்டுப் பிரகாசித்துப் பிரதிபலித்து கிரிவலம் வருபவரின் உடலை அடைவதால் பௌர்ணமி கிரிவலம் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது.
பௌர்ணமி கிரிவலத்திற்கு புராண காலத்தில் காரணம் ஒன்றும் கூறப்படுகின்றது. சிருஷ்டி காலத்தில் சந்திரன் தினந்தோறும் பூரணகலைகளுடனே பிரகாசித்தான். தினம் தினம் ‘முழுநிலவு’ என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமல்லவா?
சந்திரன் என்னதான் முழு ஒளி பெற்றுத் திகழ்ந்தாலும் அது சூரியனின் ஒளி பிரதிபலிப்புதானே! சுய ஒளி உடையதல்லவே. ஆகவே, சுய ஒளியை அடைய வேண்டு இறைவனை நோக்கித் தவம் செய்யலானார். சந்திரனின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன் சந்திரன் முன் தோன்றி சூரியனிலும் அதிக சுயம்பிரகாசம் பொருந்தியது நட்சத்திரங்களென்றும் தட்சனின் புதல்விகளான அந்த நட்சத்திர தேவியர்களை மணம் புரிந்து கொண்டால் அவர்களின் சுய ஒளி உனக்குக் கிடைக்கும் என்று அருள் புரிந்து மறைந்தார்.
சந்திரனும் தட்சனின் புதல்விகளான 27 நட்சத்திர தேவிகளையும் சந்தித்து இறைவனின் நிபந்தனையைக் கூறி தம்மை மணந்து கொள்ள அவர்களின் சம்மதத்தைக் கோரினான். ஒவ்வொரு நட்சத்திர தேவியும் சந்திரனுக்கு ஒவ்வொரு விதமான நிபந்தனையை விதித்தனர். சந்திரனும் அவர்களின் அந்த நிபந்தனைகளை நிபந்தனைகளை நிறைவேற்றி 27 நட்சத்திர தேவியர்களையும் மணந்தார்.
இப்படி 27 நட்சத்திர தேவியரின் கூட்டுறவு இருந்தமையால் சந்திரன் சுய ஒளியுடையவராகி தெய்வீக ஒளிபெற்று தினமும் பூரண சந்திரனாக அருள்பாலித்தார்.
இப்படி இருக்கையில் நட்சத்திர தேவியர்க்குக் கொடுத்த வாக்கினை மறந்து ரோகிணி தேவியிடம் சற்று பிரியம் அதிகம் கொள்பவரானார். இதனால் மற்ற தேவியர் எல்லாம் தந்தையான தட்சனிடம் புகார் கூறினர். அனைத்து தேவியரிடமும் சமமான அன்பு செலுத்துவேன் என்று கூறிய வார்த்தையைக் காப்பாற்றாத சந்திரனுக்கு அவனது பிரகாசம் தேயுமாறு தட்சன் சாபமிட்டான். அதனால் சந்திரனின் கலைகள் அத்தனையும் தேய்வடைந்தன.
சந்திரனின் நிலைகண்டு 26 நட்சத்திர தேவியரும் தம் செயலுக்காக வருந்தி ரோகிணி தேவியையும் அழைத்து திருவண்ணாமலையை வலம் வந்தனர்.
இந்த நட்சத்திர தேவியர் ஞாயிற்றுக் கிழமையில் திருவண்ணாமலையை வலம் வந்தமையால் சூரியனின் அருட்கடாட்சமும் ஆதிபராசக்தியின் 64 கலைகளும் அவர்கட்கு கிட்டியமையால், சிவபெருமானும் அவர்கள் மேல் இரக்கம் கொண்டு அவர்களின் வேண்டுகோளின் படியே மூன்றாம் பிறை சந்திரனைத் தம் முடியில் ஏற்று மாதத்தில் பாதி நாட்கள் கலைகள் வளர்வதாக, மீதி நாட்கள் தேய்வதாக என்று அருளினர். வளர்பிறை நிலவாய் வளர்ந்து பூரணத்துவம் பௌர்ணமி அன்று அடையும் என்று அன்று அண்ணாமலையை வலம் வருபவர் அனைத்து நன்மைகளையும் அடைவர் என்று அருளினார்.
இதன்படி யார் ஒருவர் பௌர்ணமியன்று அருணாசலத்தில் கிரிவலம் வருகிறார்களோ அவர்களுக்கு திருவண்ணாமலைத் திருமேனியில் பிரகாசிக்கும் நிலவின் 16 கலைகளும் பராசக்தியின் 64 கலைகளும் 27 நட்சத்திர தேவியரின் பிரகாசமும் அருட்செல்வமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பௌர்ணமியன்று திருவண்ணாமலையை வலம் வருபவர்களுக்கு பதிணென் சித்தர்கள் அருளாசி வழங்குவதாகக் கூறப்படுகிறது.