அண்ணாமலையின் கிரிவலம் அகில அண்ட சராசரத்தையும் வலம் வருவதற்கு சமமாகும். திருவண்ணாமலையின் கிரிவல பெருமையை அருணாசலப் புராணத்தில் குறிப்பிடும் போது
“சோணகிரி வலம்புரிதல் பிறவி என்னும்
பெருங்கடற்குத் தோணி ஆகும்
ஏழ்நரகக் குழிபுகுதாது, அரியமத்தி வழிக்கு
ஏற ஏணி ஆகும்”
என்று குறிப்பிடுகிறது.
அதாவது பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பதற்கு ஒரு தோணி தேவை. அத்தோணி என்பது திருவண்ணாமலையின் கிரிவலம்தான். அது ஏழுவிதமான நரகக் குழிகளில் விழுந்து விடாமல் முக்தி எனும் மோட்ச வீட்டை அடைவதற்கு ஏணியாக இருந்து உதவி செய்கிறது இந்தக் கிரிவலம்.
இந்த அருணாசலத்தை வலம் வருவதால் கிடைக்கின்ற பலன்களுக்கு நிகராக வேறு பலன்களை சொல்ல இயலாது. காசி, அயோத்தி, மதுரை, மாயாபுரி, அவந்தி, துவாரகை, காஞ்சிபுரம் முதலான புண்ணிய நகரங்களில் ஒரு கற்ப காலம் (432 கோடி ஆண்டுகள்) தவம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளைவிட அருணாசல கிரிவலத்தால் கிடைக்கும் நன்மைகள் மிக அதிகம்.
இந்த அருணகிரி கிரிவலமானது பல ஆண்டுகள் அருந்தவம் செய்து பெறுகின்ற நன்மைகளை விட ஒரு முறை கிரிவலம் வருவதால் அதிக நன்மைகள் பெறலாம். பல வித அப்பியாசங்கள் பயின்று அடைகிற அஷ்டமா சித்திகளைவிட இந்த கிரிவலம் வருவதால் எளிதில் சித்திகள் அடையலாம். இவ்வளவு ஏன், அகன்று ஓடும் நர்மதா நதி அளவுக் கள்ளைக் குடித்த பாவம் கூட அருணாசலத்தை வலம் வந்தால் தீர்ந்து விடும்.
அண்ணாமலையை வலம் வர வேண்டும் என்று நினைத்தாலே போதும், அந்தக் கணமே சூறாவளிக் காற்றுக்கு முன் உள்ள தீபம் அணைந்து போவது போல ஒருவருடைய பாவங்கள் அணைந்து போய் விடும். திருவண்ணாமலையை வலம் வர வேண்டும் என்று நினைத்து ஒரு அடி எடுத்து வைத்தவர்க்கு யாகம் செய்த பலன் கிடைக்கும், இந்த பூமியையே ஒரு அடியில் வலம் வந்ததன் பலன் உண்டாகும். இரண்டடி வைத்தவற்கு இராசசுயம் செய்த பலன் கிடைக்கும், புண்ணிய தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடிய பலன் கிடைக்கும். மூன்றடி எடுத்து வைத்தவர்க்கு எல்லா யாகத்தின் பயனும் உண்டாகும். மூன்றாவது அடி எடுத்து வைத்தவுடனே பலவகையான தானங்கள் செய்த பலன் கிடைக்கும். நான்கடி எடுத்து வைத்தவர்க்கு அஷ்டாங்க யோகம் செய்த பலன் கிடைத்து விடும் என்று அருணாசல புராணம் தெரிவிக்கிறது.
இந்த அருணையை வலம் வந்தவர்களுடைய கால்களில் ஒட்டியிருக்கின்ற தூசானது யாருடைய உடலில் படுகிறதோ அவர்க்கு பிறவி நோய் நீங்கிவிடும். நரகத்தைக் கூட சுவர்க்கமாக மாற்றி விடும். மலையை வலம் வந்தவர்களின் காலில் ஒட்டி இருக்கின்ற தூசுக்கே இவ்வளவு மகத்துவம் என்றால் மலை வலம் வந்தவர்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்க வேண்டும்?
நாம் நல்ல கல்விச் செல்வத்தைப் பெற விரும்பினாலும் நல்ல மழலைச் செல்வத்தை பெற விரும்பினாலும், கலைகளில் சிறக்க விரும்பினாலும், நல்ல மாதரைப் பெற விரும்பினாலும் இந்த புனிதத் திருவண்ணாமலையை அவசியம் வலம் வருதல் வேண்டும்.
திருவண்ணாமலையை வலம் வந்தவர்களின் பாதத்துகள் நரகத்தைக் கூட கயிலாயம் போல பரிசுத்தமாக்க வல்லது. மேலும், அவர்கள் கயிலையைச் சேருங்கால் பலன் தேவர்களும், அத்தேவர் தலைவனாகிய இந்திரனும் அவர்களை உபசரிப்பான். பல தேசங்களில் புனித நீராடிய பலனும் தேசம் தோறும் சென்று பல சிவத்தலங்களை தரிசித்த பலனும் எவ்வித யோகத்தின் பலனும் அருணை கிரிவலத்திற்கு ஒப்பாகாது.
இந்த கிரிவலத்தால் இவ்வுலக வாழ்க்கையில் மட்டுமா புண்ணியம் கிடைக்கிறது. உலக வாழ்வு முடிந்து கயிலாயத்திற்குள் நுழையும் போது திருவண்ணாமலையை கிரிவலம் செய்த புண்ணியத்தால் சந்திரன் வெள்ளைக் குடை பிடித்து அவர்களை வரவேற்பான். சூரியனோ கையில் விளக்கேற்றி இறைவனிடம் அழைத்து செல்வான். பயணத்தில் சோர்வடையாமலிருக்க தர்மதேவதையும் உடன் ஆதரவாக வருவாள்.
இந்திரன் மலர்களைத் தூவி வரவேற்பான். செல்வத்திற்கு முக்கியத்துவம் தராமல் சிவனுக்கு முக்கியத்துவம் தந்ததால் அவர்க்கு செல்வத்திற்கு அதிபதியான குபேரன் தண்டனிட்டு தன் வணக்கத்தை தெரிவிப்பான். அஷ்டவசுக்களும் மலர் தூவி வாழ்த்துவார்கள். தேவ கன்னியர் இசைபாடி நடனமிட்டு வரவேற்பார்கள். நான்கு வேதங்களும் முழங்கி முகமன் கூறும். மேகமானது அமுதமேந்தி மழை பொழிய தயாராகும். தேவியானவள் மலரும் கஸ்தூரியும் தர முன்வருவாள்.
தாம் வலம் செய்வது போல் மற்றவரையும் அண்ணாமலையை அலம் செய்ய சொன்ன அளவில் அவருடைய பல பாவங்களும் வருத்தமுற்று நடுங்கி ஓடிப் போகும். அவரின் சொல் கேட்டு அண்ணாமலையை வலம் வருதல் வேண்டும் என்று நினைத்த அளவில் மற்றவரின் பல பாவங்களும் ஓடிப் போகுமாம்.
காசி முதலான பல தலங்களிலும் சிவபெருமானைப் பலகாலம் பூசித்த பலனும், அநேக காலம் இறைவனை எண்ணித் தவம் செய்த பலனும் ஒருவர் பக்தியுடன் திருவண்ணாமலையை கிரிவலம் செய்தால் கிடைக்கும்.
அண்ணாமலையார் வலம் எல்லா உலகங்களையும் வலம் வருவதற்கு ஈடாகும். என் வடிவமான திருவண்ணாமலையை பக்தியுடன் பிரதட்சணம் செய்பவன் என் சாருப்யமடைகிறான். மேலும் அவன் சகல லோக நாயகனாகி மேலான பதவியை அடைகிறான்.
இம்மலையை பிரதட்சணம் செய்வோர் பாதங்கள் புண்பட்டாலும் வலியுற்றாலும் அவன் சக்ரவர்த்தியின் பதவியை அடைந்து பிறகு அழிவற்றதும் மிக உயர்ந்ததுமான பதவியை அடைவான் என்று முருகனுக்கு சிவபெருமான் உபதேசம் செய்திருப்பதாய் புராணங்கள் சொல்கிறது.