திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆண்டு தோறும் சுமார் பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும் இந்த வைபவத்தின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் ஆறாம் தேதி மலை உச்சியில் கார்த்திகை மஹா தீபம் ஏற்றப் படுகிறது.
திருவண்ணாமலை தல புராணத்தின் படி கலியுகத்தில் பக்தர்களுக்கு அழல் வடிவாய் காட்சியளிக்க இறைவனாகிய சிவபெருமான் இசைகிறார். அதன்படி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை நட்சத்திரத் திருநாளில் 2600 அடி உயர மலையின் உச்சியில் சிவபெருமான் ஜோதி வடிவாக அனைத்து பக்தர்களுக்கும் காட்சியளிக்கிறார்.
திரு அண்ணாமலையார் கோவிலில் டிசம்பர் 6, 2022 அன்று காலை 6 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப் படுகிறது. அதன் தொடர்ச்சியாக மாலை 6 மணி அளவில் சில நொடிகளே காணக்கிடைக்கும் அற்புதமான அர்த்தநாரீஸ்வர நர்த்தன தரிசனத்தைத் தொடர்ந்து திருவண்ணாமலை மலை மீது மகா தீபமும் ஏற்றும் வைபவம் நிகழ உள்ளது.
இந்த நிகழ்ச்சியை ஒட்டி திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் வருகை புரியும் பக்தர்கள் அனைவருக்கும் பலவிதமான வசதிகளையும் முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது.
குறிப்பாக நாடு முழுவதும் இருந்து திருவண்ணாமலை திருத்தலம் வர 14 கூடுதல் சிறப்பு ரயில்களையும், 2700 சிறப்பு பேருந்துகளையும் இயக்க தமிழக அரசு ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.