இறைவன் அக்கினிப் பிழம்பாய், அழல் வடிவாய் திருவண்ணாமலையில் அமர்ந்தாலும் அதன் அடிவாரத்தில் அமர்ந்த லிங்கத் திருவுருவிற்கே திருமாலும், பிரமனும் பூசை செய்தனர். ஆனால், இறைவனே அக்கினை மலையாய் அமர்ந்துள்ளதை அறிந்த சித்தர்களும், தேவர்களும் அவரைத் தரிசிக்க அண்ணாமலைக்கு வந்தனர். இறைவன் அழல் வடிவாய் இருப்பதனால் சாதாரணக் கண்களால் அவரை தரிசிக்க இயலாது வருந்தினர். அதனால், “இறைவா! திருவண்ணாமலையில் தங்களின் அழற்பிழம்பு வடிவத்தைச் சாதாரண ஜீவனும் காணுகின்ற வடிவத்தில் காட்சியளிக்க வேண்டும்” என்று வேண்டிக் கடுமையாக தவம் இயற்றினர்.
இறைவனும் அவர்களது கோரிக்கைக்கு இரங்கி அவர்கள் முன் தோன்றி சித்தர்கலே கலங்காதீர். யாம் கிருத, திரேதா, துவாபர, கலியுகங்களில் ஒவ்வொரு யுகத்திலும் அந்தந்த யுக நியதிகளுக்கேற்ப ஒவ்வொரு வடிவமாக திருவண்ணாமலையில் காட்சியளிப்பேன் என்று கூறினார்.
அவரது சொல்படியே திருவண்ணாமலை கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் காட்சியளிக்கிறது. பஞ்சபூதத் தலங்களில் முதலில் தோன்றியது அக்கினித் தலமான திருவண்ணாமலையே. அதன்பிறகே, காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் (நிலம்), திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்(நீர்), காளஹஸ்தி திருக்காளத்தீஸ்வரர் (வாயு), சிதம்பரத்தில் அம்பலவர் (ஆகாயம்) என ஆலயத் தோற்றம் கண்டது. ஏனைய திருக்கோயில்கள் தேவர்கள் வழிபாட்டிற்கும் இந்த திருவண்ணாமலை சித்தர்கள் வழிபாட்டிற்கும் உரியதாயிருப்பதற்குச் சில சிறப்பான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
இமய மலையிலுள்ள கயிலங்கிரி இறைவன் வாழும் மலை என்றாலும், இறைவனே மலை வடிவில் இங்கு எழுந்தருளியிருப்பது தனிச் சிறப்பு. ஆலயங்களை வலம் வருவதை விட ஆண்டவனை வலம் வருவது மிகுந்த பேறு அல்லவா? அகிலத்தையும் வலம் வந்த சிறப்பை விட ஆண்டவரை வலம் வந்த சிறப்பு அற்புதமானது என ஆறுமுகனுக்கு உணர்த்திய அண்ணலல்லவா மலை வடிவமாக இங்கு அமர்ந்திருக்கிறார்.
திருவண்ணாமலையில் சிவ பெருமான மலை வடிவில் காட்சியளிப்பதால் ஆலயத்தை சுற்றி வருவதை விட மலையை சுற்றி வலம் வருவதுதான் மிகச் சிறந்த வழிபாடாக கருதப்படுகிறது.
இறைவனாகிய திருவண்ணாமலையை ஒரு முறை சுற்றி வந்தால் ஒரு கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது சித்தர்கள் திருவாக்கு.
கயிலாயமும், மேரு மலையும், இறைவன் உறையும் இடங்களாகும். ஆனால், திருவண்ணாமலையோ இறைவனது திருவடிவமாகும். அதனால் ஏனைய மலைகளை வலம் வருவதிலும் திருவண்ணாமலையை வலம் வருவது இறைவனை வலம் வருவதற்கு ஒப்பாகும்.
மனிதர்களும் மிருகங்களும் முக்திப் பேற்றை எளிதாக அடையும் பொருட்டே இறைவன் இம்மலையுருக் கொண்டுள்ளார்.
அத்தகைய மகத்தான மலையின் சிறப்புகளை சிறிதளவு வார்த்தைகளால் மட்டும் சொல்வது அடங்காது.