சித்தர்மலை என்று பெருமையுடன் கூறப்படும் இந்த திருஅண்ணாமலை கடல் மட்டத்திலிருந்து 167.44 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மலையின் உயரம் 2665 அடியாகும். மலை சுற்றும் பாதையின் மொத்த நீளம் எட்டேகால் மைல்கள். அதாவது 13 கிலோ மீட்டர்கள். இம்மலை 12.5 டிகிரி அட்ச ரேகையிலும் 79 டிகிரி தீர்க்க ரேகையிலும் அமைந்துள்ளது.
சாதாரண கல் மலை போல காட்சியளிக்கும் இந்த திருவண்ணாமலை ஒரு காலத்தில் மாபெரும் அக்கினித் துண்டமாய் காட்சியளித்தது. அது சிவபெருமானின் திருவடிவம். ‘செந்துவண்ணனே” என்பது அப்பரின் திருவாக்கு. இப்படி இறைவன் தீவண்ணனாய் தோன்றியதற்கும் ஒரு வரலாறு காணப்படுகின்றது.
பிரமன் ஒருநாள் தன்னால் படைக்கப்பட பொருட்கள் அனைத்தையும் பார்த்து இவ்வுலகமெல்லாம் நம்மால் படைக்கப்பட்டதன்றோ, ஒரு பொருளை அழிப்பதை விட, ஒரு பொருளை பாதுகாப்பதை விட அப்பொருளை வடிவமைத்து உருவாக்குவதுதானே கடினமான வேலை. ஆகவே, படைத்தல் தொழிலைச் செய்யும் நாமே இவ்விருவரை விட மிட உயர்வானவர் என்று பிரம்மா செருக்கடைந்தார். அந்த செர்க்குடனே வைகுண்டாம் சென்று திருமாலை வம்புக்கிழுத்தார்.
திருமாலே! இந்த உலகத்தையும் அதிலுள்ள உயிர்களனைத்தையும் நாம்தான் காப்பற்றுகிறோம் என்ற ஆணவத்துடன் நீ இருக்கிறாயா? இந்த பதினான்கு உலகங்களையும் படைத்தவன் நாந்தான். இந்த பிரபஞ்சத்தில் சூரிய சந்திரர்கள், கந்தர்வர்கள், தேவர்கள், கணங்கல், ஞானிகள், சித்தர்கள், தோன்றியதற்கு மூலகர்த்தாவே நான் தான். அப்படியிருக்க உன்னை உயர்ந்தவராக கருதிக் கொள்வதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.
நான் உலகை படைக்காவிட்டால் நீ எப்படி உயிர்களைக் காப்பாற்ற முடியும்? சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியுமா? நான் படைப்புத் தொழிலை செய்தால் தானே நீ காத்தல் தொழிலைச் செய்ய முடியும்? ஆகவே, அனைத்தையும் காத்தருளும் தெய்வம் நீயே என்று நீ கொண்டிருக்கும் ஆணவத்தை நீக்குவாயாக!
இனியும் முதற் தெய்வம் நீயே என்று செருக்குக் கொண்டிருந்தாயானால், உன் காத்தல் பதவியை நீக்கி விட்டு, மற்றொருவனை உண்டாக்கி உன் பதவியில் அமர்த்துவேன், பதவியிழந்த உன்னை அசுரர் கூட்டங்களும், தேவ கூட்டங்களும் வளைத்துக் கொள்ளும் முன்பே நீ பாற்கடலில் போய் மறைந்து கொள்க என்றார்.
பிரம்மா திடீரென்று தன்னிடம் வந்து இவ்விதம் நடந்து கொண்டது திருமாலுக்கு ஆச்சரியத்தை அளித்தது. உன் தந்தையான என்னை நீ இவ்விதம் பேசுவது முறையன்று. உன்னையே படைத்தவன் நான் என்பதை நீ உணர்ந்து உன் ஆணவப் பேச்சை இத்துடன் நிறுத்திக் கொள்வாயாக என்றார்.
திருமாலின் பேச்சு பிரம்மாவுக்கு ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. திருமாலே! நீ என்னைப் படைத்தாயா? வேடிக்கையான பேச்சு இது. பிருகு முனிவர் இட்ட சாபத்தினால் ஒன்பது முறை பூமியில் பிறந்தாய். ஒவ்வொரு முறை நீ அவதாரம் எடுக்கும் போதெல்லாம் உனக்குரிய பெரிய உடல்களைப் படைத்து படைத்து என் கைகள் கறுத்தன. நம் உந்தியில்தானே இவன் பிறந்தான் என்று என்னை நீ அலட்சியப்படுத்தாதே. முன்பு ஒரு முறை இரணியனை வதம் செய்யும் பொருட்டு நரசிம்மமாகத் தூணிலிருந்து அவதாரம் செய்தாய். அதனால் அந்த தூண்தான் உனது தந்தையா? நீ அந்த தூணை தந்தையாக ஏற்றுக் கொள்வாயானால் நீயும் என்னுடைய தந்தையாவாய். உன்னிடத்தில் நான் பிறந்திருந்தாலும் உன்னை அழிக்கும் வல்லமை எனக்குண்டு என்றார் ஆணவத்துடன்.
பிரம்மன் கூறியவற்றைக் கேட்ட திருமாலுக்குக் கோபம் வந்தது. பிரம்மனே வந்த வழியை நீ அறிந்தாயில்லை. நீ இப்படியே இகழ்வாயானால் இனியும் நான் பொறுத்திருக்க மாட்டேன். மதுகைடபர்கள் எனக்குப் பிள்ளைகளாயிருந்தும் என்னை இகழ்ந்ததனால் அவர்களை நான் கொன்று விட்டே. உடம்பில் ஒரு கட்டி உண்டானால் அதனை அறுத்து எறிந்து குணப்படுத்துவதுதான் புத்திசாலித் தனம்.
முன்பு ஒரு முறை சிவபெருமான் உன்னுடைய தலைகளில் ஒன்றைக் கிள்ளி எறிந்த காலத்தில் அதற்கு பதிலாக புதிய தலை ஒன்றை உன்னால் படைத்துக் கொள்ள முடியாத நீ இவ்வளவு பெருமை பேசுகிறாயே! கோமுகாசுரன் உன்னிடத்தில் வேதங்களைப் பறித்து சென்ற போது, நீ ஏதும் செய்ய இயலாதவனாய் இருந்த போது, நான் மச்ச அவதாரம் எடுத்து அந்த அசுரனைக் கொன்று வேதங்களை மீட்டு வந்து கொடுத்தேனே, அதை நீ மறந்து விட்டாயோ?
இவ்வாறு இருவருக்குமிடயே பேச்சு வளர்ந்து சண்டையாக மாறியது. இந்த சண்டையில் இருவரும் ஒருவரை ஒருவர் கோபித்துக் கொண்டு அடித்துக் கொண்டனர். அவர்கள் சண்டையில் மலைகள் எல்லாம் தூள் தூளாக வெடித்தன. சூரியனும், சந்திரனும் ஓடி ஒளிந்து கொண்டனர். பூமிக்கு அழிவுகாலம் வந்து விட்டதோ என்று தேவர்கள் கலங்கினர். பிறகு அனைவரும் கூடி முழுமுதற்பொருளாம் சிவபெருமானிடம் சென்று விண்ணப்பம் செய்தார்கள்.
சிவ பெருமான் அவர்களுடைய அச்சத்தை அகற்றவும், போரை நிறுத்தவும், உலக உயிர்களுக்கு அருள் புரிவதற்காகவும் தாமே ஒரு பெரிய நெருப்பு வடிவமாக தோன்றினார். மிகப்பெரிய நெருப்பு உருவம் தோன்றியதைப் பார்த்து பிரமனும், விஷ்ணுவும் உடனே சண்டையை நிறுத்தி விட்டனர். அளவு கடந்துள்ள இந்த நெருப்பு மலையினது அடியையாவது முடியையாவது அறிகின்றவரே பெரியவர் என்று இருவரும் பேசி முடிவு செய்தனர்.
இந்த மலையின் அடிப்பாகத்தை நான் கண்டு பிடிப்பேன் என்று திருமால் வராக வடிவம் எடுத்து பூமியைக் குடைந்து கொண்டு போனார். நான் இந்த மலையின் தலைப்பாகத்தைக் கண்டுபிடித்து விடுவேன் என்று கூறி பிரம்மன் அன்னப்பறவையின் வடிவம் எடுத்து மேலே பறக்கத் தொடங்கினார். இருவருமே அதிவேகமாக அடிமுடிகளைத் தேடத் துவங்கினர்.
ஆயிரக்கணக்கான வருடங்கள் பூமியைத் தோண்டிப் பாதாளங்களுக்கும் அப்பால் சென்றும் திருமாலால் அந்த நெருப்புத் தூணின் அடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது சிவபெருமானின் செயலாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்து தன் தோல்வியை ஒப்புக் கொள்ள திரும்பி வந்தார்.
நெருப்புத் தூணின் முடியைக் காண ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அன்ன வாகனத்திலே மேலே போகப்போக முடிவே காணமுடியாமல் போய்கொண்டே இருந்தது. அவரும் உண்மையை உணரத் தொடங்கினார். இந்த நெருப்புத் தூண் சிவபெருமான் என்று நினைக்காமல் இருந்து விட்டேனே. மரியாதையாக விஷ்ணுவிடம் தோல்வியை ஒப்புக் கொள்வதே விவேகம் என்று திரும்பிக் கொண்டிருக்கையில் மேலேயிருந்து தாழம்பூவின் மடல் ஒன்று கீழே விழுந்து கொண்டிருந்தது. பிரம்மா அந்த மடலைக் கையிலெடுத்தார்.
அழகிய தாழம்பூவே, நீ எங்கேயிருந்து வருகிறாய்? என்று அதனிடம் கேட்டார் பிரம்மா. அதற்குத் தாழம்பூவும் பிரம்மனாலும், திருமாலாலும் அறியக்கூடாத சிவபெருமானுடைய முடியிலிருந்து தவறி விழுந்து விட்டேன். நாற்பதினாயிரம் ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் உலகினை அடைய முடியவில்லை என்று கூறிற்று.
வாசம் மிகுந்த தாழம்பூவே, நான் தான் பிரம்மன், நானும் திருமாலும் அழல் வடிவான இந்த மலையின் அடிமுடியைத் தேடி போனோம். அடியைத் திருமாலும் முடியை நானும் காணப் புறப்பட்டோம். நீண்டகாலம் கடந்தும் என்னால் முடியைக் காண முடியவில்லை. திருமாலிடம் தோல்வியை ஒப்புக் கொள்ளவும் இயலாத நிலையில் இருக்கிறேன். நீ என் பொருட்டு திருமாலிடம் பறவையாய் உருவெடுத்து இப்பிரமன் சிவனுடைய முடியைக் கண்டான் என்று சொல்வாயாக என்று வேண்டிக் கொண்டார் பிரம்மா. தாழம்பூவும் பிரம்மாவின் நிலைக்காக இரங்கி அவ்விதமே சாட்சி கூற இசைந்தது.
தாழம்பூவுடன் பிரமன் திருமாலிடத்தில் வந்தான். திருமாலே! ஒரு நொடியில் நூறாயிரம் காதம் பறந்து அழல் வடிவான சிவபெருமானுடைய திருமுடியை நான் கண்டு வந்தேன் என்று கூறினான். அருகிலிருந்த தாழம்பூவும் உண்மைதான் பிரமன் சிவனின் திருமுடியைப் பார்த்தான் என்று சாட்சி கூறியது.
உடனே அந்த நெருப்புத் தூண் படீரென வெடித்தது. மலை வெடித்ததால் பேரொலி கிளம்பியது. தேவர்களெல்லாம் நடுங்கினர். அவ்வெடிப்பினின்றும் முப்புரங்களையும் எரித்த சிவபெருமான் புன்னகையுடன் எழுந்தருளினார்.
“பிரம்மனே, ஆணவத்தால் நீ கூறியது மிக நன்றாக இருக்கிறது” என்று கூறி சிவபெருமான் நகைத்த போது அண்ட கோளங்கள் எல்லாம் கிடுகிடுவென நடுங்கின. சூரியன் ஒளியும் சந்திரன் ஒளியும் மங்கிப் போயின. மேகங்கள் மறைந்தன. மரங்களெல்லாம் கரிந்தும் போயின.. சூழ்ந்திருந்த தேவர்களெல்லாம் “இன்றோடு பிரம்மன் அழிந்து போவான்” என்று அஞ்சினர்.
அதே நேரத்தில் தாம் முதற்கடவுள் அல்லர் என்று தெளிந்த திருமால் அழல் மலையிலிருந்து தோன்றிய சிவபெருமானைப் பணிந்தார். ஆணவம் நீங்கிய பிரமனும் இறைவனைப் பணிந்தார்.
தம்மை அன்புடன் வணங்கிய திருமாலுக்கு அவர் வேண்டிய வரங்களத்தனையும் அளித்த சிவபெருமான், திருமாலைப் பார்த்து, எனக்கு சமமாக உனக்கு பூமியில் கோயிலும் பூசையும் உண்டாகும் என்று அருளினார். அருகில் தவிப்புடன் நின்ற பிரம்மனை பார்த்து, பொய் கூறிய உனக்கு பூமியில் கோயிலும் பூசையும் இல்லாமல் போவதாக என்றார். பிரம்மனுக்கு பொய் சாட்சி சொன்ன தாழம்பூவோ நடுநடுங்கியது. சிவன் தாழம்பூவை பார்த்து “ நீ பிரம்மனுடன் சேர்ந்து பொய் சாட்சி கூறியபடியால் உன்னை இன்று முதல் நான் தீண்டேன். நீ பூசைக்கு தகுதியற்ற மலராகத் திகழ்வாய்” என்றார்.
சிவபெருமானின் கோபத்துக்கு ஆளான பிரமன் தரையில் விழுந்து வணங்கினார். தன்னை மன்னிக்க வேண்டினார்.
“நீறுபூத்த நெருப்பு போன்றவனே! ஆணவமல அழுக்கு எனும் செடி மூடிக் கொண்டிருப்பதால் இவ்விதம் தவறு செய்து விட்டேன். உலகத்தின் முதல்வனே, ஆதியானவனே, அகண்ட வெளியானவனே, என் மேல் சினம் வேண்டாம். அறியாமையால் யாரும் காணுதற்கு அரியதான உம்முடைய திருமுடியைக் காண்பேன் என்று கண்டுபிடிக்க முற்பட்ட உடனேயே பறவையானேன். இதை விட வேறு என்ன துன்பம் இருக்க முடியும்? சிறிய புத்தியையுடைய எனக்கு அந்த தண்டனையே போதும், என் பிழை பொறுத்து அருள்புரிய வேண்டும்” என்று இறைஞ்சினார்.
ஆசையும் அழிந்த பிரம்மனின் நிலைகண்டு மனம் இரங்கிய சிவபெருமான் “பிரம்மனே, பூமியில் அந்தணர்களுக்குச் செய்கின்ற பூசை, உன் பூசையாக விளங்கும்” என்று அருளினார். பிறகு இருவரைரும் பார்த்து, “யாம் இந்த தலத்தில் உங்களுக்கு அருள்பாலித்தமையால் இன்று முதல் இத்தலத்தை சுற்றி மூன்று யோசனை தூரம் வரைக்கும் தூய்மையான புனிதத் தலமாக இருக்கும் ஒளிவடிவுள்ள இந்த மலை அக்னி மலையாகத் திகழும். தீவண்ணமாக இம்மலை இருப்பதால் இந்த இடத்திற்கு இனி “அருணைபுரி” என்ற பெயர் வழங்கும்.
தேவர்களும் சித்தர்களும் துன்புற்று ஓடிய போது அவர்களின் மனத்துன்பத்தை இந்த இடத்தில் தீர்த்தோம். ஆகவே, இந்த மலையும், இந்த இடமும் உலகம் முடியும் ஊழிக் காலத்தில்கூட அழிவின்றி நிற்கும். இந்த பூமியில் அரிதான தவம் செய்தவர்களுக்கு இந்த தலத்தில் பிறக்கும்படியான வரத்தைக் கொடுப்போம்.
இந்த அருணையில் தானம் செதால் ஒன்று ஆயிரமாக வளரும். இந்த தலத்தில் பாவங்கள் நிகழாது. இதை ஐயப்படுபவர்க்கு இப்பிறவியில் முக்தி கிடைக்காது. இந்த மலை பிறவி என்னும் நோயைத் தீர்க்கும் மருந்து. அதனால் இதற்கு ‘மலைமருந்து’ என்ற பெயரும் விளங்கும். இந்த மலையின் மீது மோதுகின்ற காற்று இயங்கும் பகுதிகளில் உள்ள எல்லா உயிர்களுக்கும் முக்தி கிடைக்கும் என்று சிவபெருமான் கூறினார்.
அப்போது பிரமனும் திருமாலும் இந்த அக்னி மலை மற்ற மலைகளைப் போலவே கல்மலையாக மாற வேண்டும், மலை உச்சியின் மீது எப்போதும் ஓர் ஒளி விளங்க வேண்டும் என்று வேண்டினர்.
சிவபெருமானும் அவர்கலை நோக்கி, “அக்கினி வடிவமான இந்த மலை கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல்மலையாகவும் உருவம் மாறும் என்று கூறி கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் இம்மலையின் மீது ஒளி காட்டுவோம், இந்த ஒளியைக் காண்போர்க்குத் துன்பங்கள் நீங்கும். இந்த ஒளியைக் கண்டு வணங்குபவரின் 21 தலைமுறைகட்கும் முக்தி கிடைக்கும். இந்த மலையை ஒருமுறை மனதால் நினைத்து வாயாரச் சொன்னால் ‘நமசிவாய” என்னும் மந்திரத்தை மூன்று கோடி முறை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறினார்.
இவ்வாறு சிவபெருமான் கூறியவுடன், நெருப்புத் தூணானது, நெருப்பு மலையாக வடிவம் கொண்டது. அப்பொழுது பிரமனும் விஷ்ணுவும், “இறைவா! நீங்கள் இவ்வளவு பெரிய மலை வடிவாக இருந்தால் நாங்கள் எப்படி நீராட்டி அருச்சிக்க இயலும்? வானத்திலிருந்து பொழிகின்ற மழை நீரால் அபிஷேகம் செய்து நட்சத்திர மலர்களால் மட்டுமே அர்ச்சனை செய்ய இயலும். ஆகவே, எல்லோரும் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்யும் விதத்தில் இம்மலையின் கீழ் லிங்க வடிவமாய் எழுந்தருள வேண்டும் என்று வேண்டினர்.
அவர்களில் வேண்டுகோளின் படியே மலையடிவாரத்தில் ஒரு சிவலிங்கம் தோன்றியது. சிவபெருமான் மலைக்குள் மறைந்தருளினார். திருமாலும் பிரமனும் அந்த மலையடிவாரத்தில் தங்கி பல ஆண்டுகள் பூசைகள் செய்து பின்னர் தங்கள் பதிக்குத் திரும்பினர்.
இப்படியாக இறைவனின் திருவுருவமாக விளங்கும் திருவண்ணாமலை மலையும் திருக்கோயிலுமானது பல யுகங்கள் கடந்தும் இன்றும் பல கோடி மக்களுக்கு அருள் பாலித்து வருகிறது.