நமது வீட்டில் யாருக்காவது இருமல் வாந்தி ஜுரம் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்துக் கொண்டே நாம் கை வைத்தியம் செய்யலாம். அவற்றில் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
கண்டங்கத்திரி விதை, அமுக்கிறாக்கிழங்கு, திப்பிலி (இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) மூன்றையும் கால்பலம் வீதம் எடுத்து ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கலுவத்தி விட்டு இடித்து தூளாக்கிய பின் ஒரு வெள்ளைத் துணியில் கொட்டிச் சலிக்கவும். பிறகு மூன்று வகைத் தூள்களையும் தனித்தனியாக ஒவ்வொரு கண்ணாடிக் குடுவையில் அடைத்து வைத்துக் கொள்ளவும். இந்த தூள்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சிட்டிகை எடுத்து வைத்து மூன்றையும் ஒன்றாக தேன் விட்டுக் குழப்பி நாள் தோறும் மூன்று வேளையும் சாப்பிடவும். இவ்வாறு மூன்று நாட்கள் சாப்பிட விக்கல், வாந்தி, இருமல், சுரம் அனைத்தும் நீங்கும்.
இரண்டு பச்சை வெங்காயத்தை எடுத்து மேல் தோலை நீக்கி விட்டு நான்கு மிளகும் சேர்த்து மென்று தின்னவும் இருமல் குணமாகும். காய்ச்சல் நீங்கி விடும். நீர்க் கோவையும் கட்டுப்படும்.
சீரகமும் கற்கண்டும் சேர்த்து மென்று தின்றால் இருமல் தணியும்.
கற்பூர தைலத்தை ஐந்து அல்லது ஆறு துளிகள் வெந்நீரில் விட்டுப் பருகவும். கப இருமல் குணமாகும். கபம் வெளியாகும். இதனை ஒரு நாளைக்கு ஒரு முறை பயன்படுத்த இருமல் தணியும்.
இஞ்சிச்சாறு, ஈரவெங்காயச் சாறு, எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றை ஒரு அவுன்ஸ் வீதம் எடுத்து ஒன்றாகக் கலக்கவும். காலை வேளைகளில் சாப்பிடவும். மூன்று நாட்களுக்கு இதனை சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் குணமாகி விடும்.