நான் யார்?
மனமற்ற நித்திரையில் தினம் அனுபவிக்கும் தன் சுபாவமான அந்த சுகத்தை அடைய தன்னைத் தான் அறிதல் வேண்டும். அதற்கு, நான் யார் எனும் ஞான விசாரமே முக்கிய சாதனமாகும்.
“நான் யார்?” சப்த தாதுக்களாலாகிய ஸ்தூல தேகம் நானன்று, சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தம் எனும் ஐந்து விஷயங்களையும் தனித்தனியே அறிகின்ற ஞானேந்திரியங்களும் நானன்று, வசனம், கமனம், தானம், மல விசர்ஜனம், ஆனந்தித்தல் எனும் ஐந்து தொழில்களையும் செய்கின்ற பிராணாதி பஞ்ச வாயுக்களும் நானன்று. மனமும் நானன்று, சர்வ விஷயங்களும், சர்வ தொழில்களும் அற்று, விஷய வாசனைகளுடன் மாத்திரம் பொருந்தியிருக்கும் அஞ்ஞானமும் நானன்று. மேற் சொல்லிய யாவும் நானல்லவென்று நேதி செய்து, தனித்து நிற்கும் அறிவே நான். அறிவின் சொரூபம் சச்சிதானந்தம்.
நான் யார் எனும் விசாரணைய்னாலேயே மனம் அடங்கும். நான் யார் என்னும் நினைவுமற்ற நினைவுகளை எல்லாம் அழித்துப் பிணம்சுடு தடிபோல முடிவில் தானும் அழியும் போது ஆத்ம ஞானமே திகழும்.
இது நான் யார் நூலின் உபதேச மொழிகளில் சில. ரமணரின் இந்த போதனைகளை சிரமேற் கொண்டு கவனமாக வாழ்க்கையில் உணருவோருக்கு வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் நிகழும் என்பது திண்ணம். இந்த நான் யார் விளக்கத்தை மேலும் நுண்ணிய பொருள்விளக்கம் பெற நாம் கணபதி முனிவர் எனும் ஒரு அன்பரை பற்றி தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
கணபதி முனிவர் பெரிய பண்டிதர். மகாகவி என்று சான்றோரால் புகழப் பெற்றவர். ஆனால் பல ஆண்டுகள் கடுமையான தவம் செய்தும் தவம் என்பதன் உண்மையான பொருளை அவர் உணரவில்லை.
ஒரு நாள் திருவண்ணாமலையை வலம் வரும்போது வழி அருணாசலேஸ்வரர் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. சுவாமியை விழுந்து வணங்கிய கணபதி முனிவரின் மனதில் அவர் கேள்விக்கான பதில் மலை மீது இருப்பதாக குறிப்பு கிடைக்கவே விடுவிடுவென மலை மீது செல்ல ஆரம்பித்தார்.
மலை மீது விருபாக்ஷி குகையில் தனியே அமர்ந்திருந்த ரமணரின் திருவடிகளில் விழுந்து வணங்கிய கணபதி முனிவர் தம் மனதில் அதுவரை உறுத்திக் கொண்டிருந்த சந்தேகங்களைத் தெரிவித்தார்.
“ஐயனே! கற்க வேண்டிய யாவையும் கற்றேன். வேதாந்த சாஸ்திரங்களையும் பயின்றேன். மனம் கொண்ட மட்டும் மந்திரங்களையும் ஜபித்தேன். ஆனாலும் உண்மையான தவம் என்னவென்று இன்னமும் புரியவில்லை. எனது ஐயத்தைத் தெளிவிக்க வேண்டும் என்று இறைஞ்சி நின்றார்.
ரமணர் பதிலேதும் சொல்லாமல் கணபதி முனிவரைத் தம் பார்வையால் ஊடுருவிப் பார்த்தார். அவர் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள். கணபதி முனிவர் எப்பேர்ப்பட்ட மகாஞானி. அவருள்ளத்தும் சந்தேகமா? ரமணர் சிரித்துக் கொண்டார்.
“என்ன தவம் செய்து என்ன பிரயோஜனம். உங்கள் மனதில் இன்னும் ‘நான்’ என்னும் அகம்பாவம் அகலவில்லையே? வெளிச்சத்தில் இருக்கும் போது அதனுடனேயே இருக்கும் நிழல் புலப்படாதது போலவே அகங்காரம் இருக்கும் போது உண்மைகள் மறைக்கப் படுகின்றன.
‘நான்” என்பது எங்கிருந்து புறப்படுகின்றது என்பதை உணர்ந்து கொண்டால் அதுவே தவம்.
ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணுங்கால் மந்திரத்தின் தொனி எங்கிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால் மனம் அங்கே வீனமாகிறது. அதுதான் தவம்.” என்றார்.
ரமணர் சொன்ன விளக்கங்கள் அவருக்குத் தெளிவை ஊட்டின. ரமணரிடம் தங்கி உபதேசம் பெரும் வரை பக்தர்களிடம் ரமணர் செய்த உபதேசங்களை எல்லாம் தொகுத்து வட மொழியில் சுலோகங்களாக அமைத்து ‘ஶ்ரீ ரமண கீதை’ என்னும் நூலாக செய்தார்.