குளிர்காலத்தில் மிக எளிதாக எல்லோரையும் பிடித்துக் கொள்ளக் கூடிய ஒரு உபாதை ஜலதோஷம். உடலில் நீர்கோர்த்து தலைபாரமாகவும், மூக்கில் ஒழுகிக் கொண்டும், நெஞ்சு பிடித்துக் கொண்டும் மனிதனை பாடாய்ப் படுத்தி விடும் இந்த ஜலதோஷம். ஆனால் எளிய சில வீட்டு வைத்தியங்களைக் கொண்டு இந்த ஜலதோஷத்தினால் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் சரிகட்ட முடியும். அவற்றில் சிலவற்றை இந்த பதிவில் கூறியுள்ளோம். பயன்படுத்தி பலன் பெறவும்.
முருங்கை இலையை ஒரு பிடியளவு எடுத்துப் போட்டுக் கசக்கி சாறு பிழியவும். இந்த சாறுடன் தேன் சம அளவு கலந்து உள்ளுக்கு கொடுக்கவும். குழந்தைகள் என்றால் ஒரு ஸ்பூன் அளவும், பெரியவர்களுக்கு ஓர் அவுன்ஸ் அளவும் கொடுக்கவும். விரைவில் நீர்க்கோவை நீங்கும்.
எலுமிச்சை சாறு இரண்டு அவுன்ஸ்
சுத்தமான தேன் ஒரு அவுன்ஸ்
இவை இரண்டையும் நன்றாகக் கலக்கிப் பருகினால் நீர்க்கோவை உடனே அகலும்.
காய்ச்சின பசும்பால் ஒரு கிளாஸ்.
சுத்தமான தேன் ஒரு அவுன்ஸ்.
இவை இரண்டையும் கலந்து காலை வேளையில் பருகி வந்தால் ஜலதோஷம் நீங்கும்.
ஒரு வெங்காயத்தை தோல் நீக்கி விட்டு, ஐந்து நிமிட நேரம் நன்றாக மென்று விழுங்கவும். நீர்க்கோவை நீங்கிவிடும்.
மூன்று ஏலக்காயை உடைத்து ஒரு கரண்டியில் போடவும். பசுவின் நெய்யை ஏலக்காய் மூழ்கும் அளவுக்கு அதன் மேல் ஊற்றவும். அடுப்பில் வைத்துக் காய்ச்சி இறக்கி ஆறவைக்கவும். பிறகு இந்த நெய்யை வடிகட்டி எடுத்துக் கொண்டு, இரண்டு மூன்று சொட்டு மூக்கில் விடவும். ஜலதோஷத்தினால் ஏற்பட்டிருக்கும் மூக்கடைப்ப்பு நீங்கும்.
ஒரு கோப்பை வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சைப் பழச் சாறு பிழிந்து, வறட்சி ஏற்படும் வேளைகளில் பருகி வந்தால் ஜலதோஷம் நிவர்த்தியாகும்.
நான்கு வெற்றிலை மூன்று மிளகு இவற்றை வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்க சிறிது நேரத்தில் நீர்க்கோவை மற்றும் அதனால் ஏற்பட்ட தலை பாரம் நீங்கும்.
ஒன்றிரண்டு கற்பூரவள்ளி இலைகளையும் நான்கு மிளகையும் எடுத்து தேவையான அளவிற்கு தேனை விட்டு இடித்து ஒரு உருண்டை போல தயாரித்து உட்கொண்டால் ஜலதோஷம் மற்றும் அதனால் ஏற்படும் இருமல் போன்றவை உடன் நீங்கும்.