திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிசம்பர் 6, 2022 அன்று திருவண்ணாமலை மலை மீது ஏற்றப்படும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பக்தர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
குறிப்பாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், குடிநீர் சுகாதார மருத்துவப் பணிகளை முன்னிறுத்தியும் இந்த முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நகரினை இணைக்கும் 9 முக்கிய சாலைகளில் 13 தற்காலிக பேருந்து நிலையங்கள், 59 கார் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தற்காலிக பேருந்து நிறுத்தங்களிலும், கார் பார்க்கிங்கிலும் குடிநீர் வசதி, கழிப்பறைகள், விளக்குகள், மேற்கூரைகள், காவல் மையம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகன நிறுத்தங்களில் தனியார் வாகனங்கள் நிறுத்த கட்டணம் ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ சுகாதார முன்னேற்பாடுகளாக திருக்கோயில் வளாகத்திற்குள் 3 மருத்துவக் குழுக்கள் (இதய மருத்துவருடன்), கிரிவலப் பாதையில் 15 நிலையான மருத்துவ குழுக்கள், பதினைந்து 108எண் ஆம்புலன்ஸ்கள், 10 மோட்டார்பைக் ஆம்புலன்ஸ்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்களின் வசதிக்காக 35 இடங்களில் May I Help You Boothகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு பணிகளுக்காக 57 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்படுத்தி, திருவண்ணாமலை நகர் சுற்றியும் திருவிழாக் காலத்தில் 12000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் படுவார்கள் என்றும், 26 தீயணைப்பு வாகனங்கள் 600 தீயணைப்பு வீரர்களுடன் தயார் நிலையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக திருக்கோயில் வளாகத்திற்குள்ளும் கிரிவலப்பாதையிலுமாக சுமார் 250 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு அனைத்து நடமாட்டமும் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.