சைவத்தின் தலைநகராமாம் திருவண்ணாமலை நகரத்தின் உள்ளேயும் நகரத்தை சுற்றியும் பல திருக்கோயில்கள் இருக்கின்றன. திருவண்ணாமலை நகரத்தின் உள்ளே மட்டும் தொன்மை வாய்ந்த திருக்கோயில்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை இருக்கின்றன. அனைத்திற்கும் மேலாக மலையே லிங்க ரூபமாக எழுந்தருளியிருப்பது இந்நகரின் தனிச்சிறப்பு. திருத்தலமே கோயிலாக இருந்தாலும் இத்தலத்தை சுற்றி குறிப்பிடத்தக்க பல கோயில்கள் ஒரு சில மணித் துளி யாத்திரையில் சென்று காண்பதாக அமைந்துள்ளது. அவற்றில் மிக பிரபலமான 7 முக்கியத் திருக்கோயில்களை இங்கு உங்கள் வசதிக்காக பட்டியலிட்டு இருக்கிறோம்.
1. படைவீடு (படவேடு) ஶ்ரீரேணுகாம்பாள் திருக்கோயில்.
திருவண்ணாமலையில் இருந்து சுமார் 50கிமீ தொலைவில் உள்ள, சக்தி பீடங்களில் ஒன்றான படைவீடு அம்பாளின் சக்தியை எளிதில் உணரக்கூடிய ஸ்தலம். மலைகளுக்கு நடுவே மலைச்சாரலில் அமைந்திருக்கும் இத்திருக்கோவிலில் ஆடிமாத வைபவங்கள் விசேஷம்.
2. காஞ்சிபுரம் திரு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்.
பஞ்சபூத ஸ்தலங்களில் நெருப்பு ஸ்தலம் திருவண்ணாமலை என்றால் நிலத்திற்கான ஸ்தலம் திரு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். திருவண்ணாமலையில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் இருக்கும் காஞ்சிபுரத்தில் ஏகம்பனாக சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் இடம். இது ஒரு பாடல் பெற்ற ஸ்தலாமாகும்.
3. பருவதமலை
திருவண்ணாமலையில் இருந்து போளூர் வழியாக பருவதமலையை சென்றைடையலாம். சித்தர்கள் வாழும் பகுதியாக நெடிய செங்குத்தான ஏற்றத்துடன் இருக்கும் இந்த மலையின் உச்சியில் உள்ள சிவன் கோவில் இம்மலை ஏறி வந்த அனைவருக்கும் பாப விமோசனமும் புத்தாற்றலையும் அளிக்கிறது.
4. இஞ்சிமேடு சிவன் ஆலயம்
திருவண்ணாமலையில் இருந்து சுமார் 30 நிமிட சாலை பயணத்தில் செங்கம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது இந்த இஞ்சிமேடு சிவன் ஆலயம். மிகவும் தொன்மையான ஆலயம் ஆனால் பாழடைந்து கிடந்தது கண்டு பக்தர்களால் புனரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
5. காஞ்சிபுரம் ஶ்ரீ கைலாசநாதர் திருக்கோயில்
பல்லவர் காலத்தில் எழுப்பப்பட்ட அழகிய சிற்பக்கலைகளோடு கூடிய சிவன் ஆலயம் இது. இன்று தொல்லியல் துறை வசம் இருந்தாலும் தினந்தோறும் சகஜ பூஜை புணஸ்காரங்களோடு நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது.
6. காஞ்சிபுரம் ஶ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்
காஞ்சிபுரத்தில் இரண்டு காஞ்சிகளில் விஷ்ணுவுக்குரிய விஷ்ணுகாஞ்சியின் பிரதான் கோவில் இந்த வரதராஜ பெருமாள் திருக்கோயில். நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வெளிவந்து காட்சி தரக்கூடிய “அத்திவரத” மூர்த்தியை தன் தீர்த்தக் குளத்துள்ளே கொண்டுள்ள திருக்கோயில். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் செல்பவர்கள் தவறாமல் காண வேண்டிய திருக்கோயில்.
7. மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில்
திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் என்றால் மேல்மலையனூரில் அமாவாசை திருநாள் பிரசித்தம். உக்ரரூபியாக திரு அங்காளம்மன் கொலு வீற்றிருந்து இங்கு அமாவாசை திருநாளில் வந்து இரவு தங்கியிருந்து உபவாசமிருந்து தன்னிடம் வேண்டுவோரின் கோரிக்கையை அம்பாள் நிறைவேற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். திருவண்ணாமலையில் இருந்து செஞ்சி வழியாக மேல்மலையனூர் செல்ல முடியும்.
8. ஏரிக்குப்பம் திரு யந்திர சனீஸ்வரர் திருக்கோவில்
உலகம் முழுவதும் சனீஸ்வரர்க்கு மூன்றே திருக்கோயில்கள் உள்ளன. முதலாமது திருநள்ளார், இரண்டாவது மகாராஸ்டிரத்தில் இருக்கும் சனிசிங்கனாப்பூர், மூன்றாவது ஏரிக்குப்பம் திரு யந்திர சனீஸ்வரர் திருக்கோவில். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து படவேடு செல்லும் வழியில் இருக்கிறது இந்த கோவில். இங்கு சனீஸ்வரர் யந்திர ரூபத்தில் வீற்றிருக்கிறார். சனிக்கிழமைகளிலும், சனிப்பிரதோஷ நாட்கள் மற்றும் சனிப்பெயர்ச்சி நாட்களிலும் இந்த திருக்கோவிலில் நடக்கும் விசேஷ பூஜைகளுக்கு செல்வது சிறந்த பலன்களைத் தரும்.
9. கோட்டைமலை திரு வேணுகோபால சுவாமி திருக்கோவில்
படவேட்டிற்கு மிக அருகாமையில் சுமார் 5 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது இந்த திருக்கோவில். சுமார் 2500 அடி உயர மலையில் மலைவனங்களுக்கு நடுவில் வேணுகோபாலசுவாமி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
இவை மட்டுமல்லாது திருவண்ணாமலையிலிருந்து வெங்கடாஜலபதி தரிசனத்திற்கு திருப்பதி செல்வது மிக எளிது. திருவண்ணாமலையிலிருந்து சாலை மார்க்கமாக வேலூர் சித்தூர் வழியாக சுமார் ஐந்து மணி நேரத்தில் திருப்பதியை சென்றடையலாம்.