சாத்தனூர் அணை.
சாத்தனூர் அணை 1958ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
சாத்தனுர் நீர்த்தேக்கம் :
திருவண்ணாமலைப் பகுதிக்கு நீர்ப்பாசனம் போதாத காரணத்தால், சாத்தனுர் நீர்தேக்கத் திட்டம் 1949 இல் உருவானது.
1958ம் ஆண்டு கட்டப்பட்ட சாத்தனூர் அணை:
சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னகேசவ மலைகளுக்கு இடையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். தமிழகத்திலுள்ள குறிப்பிடத்தக்க அணைகளுள் இதுவும் ஒன்று. இது திருவண்ணாமலை நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த அணை 1958-இல் கட்டப்பட்டது. இங்கு அழகிய பூங்காவும் முதலைப்பண்ணை ஒன்றும் உள்ளது. இதன் கொள்ளளவு 7321 மில்லியன் கன அடிகள். முழு அளவு 119 அடி உயரம். திருவண்ணாமலை உட்பட பல பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பாசன வசதியையும் அளிக்கிறது.
நீர்த்தேக்கத்தின் தோற்றம் :
இந்நீர்த் தேக்கத்தின் மொத்த நீளம் 2583 அடி அதில் 1400 அடி கட்டடப் பகுதி. 1183 அடி மண் அணைப்பகுதி. நடுவில் 432 அடி மடை உள்ளது. அதில் 9 கண்கள் உண்டு. ஒவ்வொரு கண்ணின் அகலமும் 40 அடி. கடைக்காலின் ஆழம் 135 அடி கடைக் காலுக்கு மேலாக அணையின் உயரம் 147 அடி. இவ்வணைக்கட்டு வேலை 1955 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு, 1956 மே மாதத்தில் முடிந்தது.
அமைப்பு :
சிறிய அணைக்கட்டின் இடது புறம் அமைந்துள்ள மடையில் 3 கண் உள்ளன. ஒவ்வொன்றும் 9 அடி அகலம் 5 1/2 அடி உயரம் உடையது. இக்கண்கள் வழியாக நொடிக்கு 400 க.அடி நீர் வெளியாகிறது. தலைக் கால்வாயின் தொடக்கத்திலிருந்து எட்டு மைல் வரையில் நீர்க் கசிவு ஏற்படா வண்ணம் சிமெண்ட் கால்வாய் போடப் பட்டுள்ளது. இதனால் சேமிக்கப்படும் நீர் மேலும் 1000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன மளிக்கும்.
இக்கால்வாயின் முதல் 6 மைல்களுக்குள் 6 பாலங்களும், ஒரு பெரிய நீர்குழாயும், இரண்டு நடைபாலங்களும், இரண்டு மேம்பாலங்களும், 11 சுரங்க வழிகளும் கட்டப் பட்டுள்ளன. 6 மைல்களுக்கு அப்பால் 3 பாலங்களும் 8 சுரங்க வழிகளும் கட்டப் பட்டுள்ளன. இவ்வணை இம்மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலமாகக் கருதப்டுகிறது.
திரைப்படத்துறையினர் இப்பகுதியில் படம் பிடிப்பு நடத்துகின்றனர். இவ்வணையைச் சுற்றிலும் அமைந்துள்ள மின்சார அலங்காரம் பாதிப்பேரைக் கவரக்கூடியது.
சி்றப்பம்சங்கள்:
இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாதுமலை தொடர்ச்சியில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது சாத்தனூர் அணை. திருவண்ணாமலையில் இருந்து 32 கி.மீ தூரம். அந்தக் காலத்து சினிமாவில் டூயட் பாட்டு என்றால், இந்த அணைதான் சிறந்த லொகேஷன். 500க்கும் மேற்பட்ட சினிமா படப்பிடிப்புகள் இங்கு நடந்துள்ளது. 119 அடி உயரமும், 7,321 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவும் கொண்ட பிரமாண்டமான அணையில், படகு சவாரி வசதியும் உள்ளது. பேட்டரி காரில் பயணம் செய்து அணையை சுற்றிப் பார்க்கலாம்.
50 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த பூங்கா உள்ளது. அணையில் குளிக்க அனுமதியில்லை. அந்தக் குறையை போக்க அருகிலேயே நீச்சல் குளம். பலவகை முதலைகளை உள்ளடக்கிய மிகப்பெரிய முதலைப் பண்ணையும் இங்கு அமைந்துள்ளது. சுமார் 300 முதலைகள் பண்ணையில் உள்ளன. அணையை சுற்றிப் பார்க்கவும், முதலைப்பண்ணைக்கும் கட்டணம் உண்டு. இங்கு சுடச்சுட வறுத்து விற்கப்படும் மீனுக்கு ஏக கிராக்கி. சைவ, அசைவ உணவகங்கள், தங்குவதற்கு குறைவான கட்டணத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதி உள்ளது. திருவண்ணாமலை, செங்கம், வேலூர் ஆகிய இடங்களில் இருந்து சாத்தனூர் அணைக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது.